‘அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லை’ - தலைமை ஆசிரியர்களிடம் உறுதிமொழி கோருவதால் குழப்பம்


கோப்புப் படம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 218 பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை.

மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் சார்பில் உள்ளூர் புரவலர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து அறக்கட்டளைகளை தொடங்கி ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.

அதேபோல், மக்களின் ஆங்கில வழி கல்வி மோகத்தை கருத்தில்கொண்டு, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க கல்வித் துறை அறிவுறுத்தியதன்பேரில், இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நியமனங்களுக்கு கல்வித் துறை அலுவலர்கள் எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் எதையும் வழங்குவதில்லை. இந்நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லை என்று உறுதிமொழி சான்று அளிக்க, கல்வித் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, தலைமை ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, "தொண்டு நிறுவனங்கள், பழைய மாணவர்கள், புரவலர்கள் வாயிலாக ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வரும், கல்வி அமைச்சரும் கூறி வருகின்றனர். பெற்றோர் மத்தியில் ஆங்கிலவழிக் கல்விக்கு அதிக வரவேற்புள்ளதால், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டுவரப்பட்டன.

இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிடிஏ மூலமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லை என்று உறுதிமொழி சான்று அளிக்க வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு அளிக்கப்பட்ட தகவல்கள், பின்னர் தவறு என கண்டறியப்பட்டால் மேல் நடவடிக்கைக்கு உட்படுத்த உறுதியளிக்கிறேன் என்று கடிதம் கோரப்பட்டுள்ளது, தலைமையாசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். பள்ளிகள் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

x