கனமழை எதிரொலி: இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


சென்னை: கனமழை எதிரொலி காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உறுதி செய்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை எதிரொலி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் நவம்பர் 27 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக இந்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

x