மதுரை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள்களுக்கான செலவுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாத்தாள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரம், 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் வினாத்தாள் அனுப்பப்படுகிறது.
இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பள்ளிகளுக்கு அரசு வழங்கிய பிரின்ட்டர் மூலம் அச்சடிக்கின்றனர். தேர்வின்போது அந்த வினாத்தாள்கள் மாணவர்களுக்கு தரப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 40 மாணவர்களுக்கான வினாத்தாள்களை பிரின்ட் எடுப்பதற்கான டோனர் செலவு ரூ.800, பேப்பர் செலவு ரூ.500 என மொத்தம் ரூ.1,300 தலைமை ஆசிரியரின் வங்கிக் கணக்குக்கு அரசு அனுப்புகிறது. 40-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ரூ.1,800 வழங்கப்படுகிறது.
அதேநேரம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்த செலவுத் தொகை வழங்கப் படுவதில்லை. இந்த செலவை அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் ஏற்கும் நிலை உள்ளது. எனவே, பாரபட்சமின்றி அரசு பள்ளிகளைப் போல், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத் தாள்களை அச்சடிக்கும் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.