சென்னை: கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில், மனிதனை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மையம் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில், மனிதனை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மையத்தை சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னால ஜிஸ் அறக்கட்டளை தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொழில் துறை 5.0 (இண்டஸ்டரி 5.0) கொள்கைகளுடன், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் இந்த மையம் செயல்படும். இதில், மனித ஆற்றலை பெருக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.
இணைய மோசடிகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் குடிமக்களை பாதுகாக்கும் அம்சங்களும் இதில் இடம்பெறும்.
நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதுகாப்பாக, பொறுப்புமிக்கதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும், இந்த துறையில் எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளை கண்டறியவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.