ஹைதராபாத்: நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று சத்துணவு சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் மாகனூர் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அவர்களை பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக சில மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றி பேசிய மாணவர், "எங்களுக்கு உப்புமா வழங்கப்பட்டது, நாங்கள் அதை சாப்பிட்டோம். பின்னர், உணவில் புழுக்கள் இருப்பதாக பள்ளி ஊழியர்களிடம் கூறினோம், அவர்கள் (அதிகாரிகள்) அதை தூக்கி எறிந்தனர்" என்று கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான்கு மாணவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, சிறந்த சிகிச்சை அளிக்கவும் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பணியில் அலட்சியமாக இருப்பவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க நாராயண்பேட் மாவட்ட ஆட்சியருக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என எச்சரித்த அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.