ராமநாதபுரம்: உலக மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி அறிவியல் பண்பாட்டுக்கழகம் 1988-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவ.19 முதல் நவ.25 வரை உலக மரபு வாரமாகக் கொண்டாடி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாப்பதில் ராமலிங்க விலாசம் அரண்மனை முக்கியப் பங்காற்றி வருகிறது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி யின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்கள் சேதுபதி மன்னர்கள். இதனால், 1690-ம் ஆண்டுகளில் கிழவன் சேதுபதி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனைக்கு ராமலிங்க விலாசம் எனப் பெயரிட்டனர்.
ராமநாதபுரத்திலுள்ள ராமலிங்க விலாசம் அரண் மனையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978 முதல் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்த அரண்மனை 17 மற்றும் 18-ம் நூற்றாண்டின் பண்பாடு, நாகரிகம், அரசியல், சமயம், சமுதாயம் மற்றும் நுண்கலைகளை அறிந்து கொள்ளும் வரலாற்றுக் கருவூ லமாகத் திகழ்கிறது.
ராமலிங்க விலாசத்தின் சுவர் களிலும், மேல் விதானங்களிலும் கி.பி. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. சேதுபதி மன்னரின் அரசியல் வாழ்வை விளக்கும் காட்சிகள், அன்றாட வாழ்வில் மன்னரின் நடைமுறைகள், பொழுதுபோக்குகள், ராமாயணம் மற்றும் பாகவதக் காட்சிகள், தமிழகத்தின் முக்கியமான சமயத் தலங்கள் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன.
மன்னர் கிழவன் சேதுபதிக்குப் பின்னர் 1706 முதல் 1730 வரையிலும் ஆட்சிபுரிந்த முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஓவியங்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் சேதுபதி மன்னர்கள் காலத்து நாகரிகத்தையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளக்கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ்கின்றன. உலகம் முழுவதும் நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதால், மாணவர்களின் தேடலுக்குச் சிறந்த தீனியாக இந்த அரண்மனை இருக்கும். அரண்மனையையும், அரசு அருங்காட்சியகத்தையும் இலவசமாகப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.