உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


சென்னை: ஜேஇஇ, நிட் போன்ற உயர்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாதம் ஜேஇஇ முதன்மை தேர்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவன தேர்வு (NID- National Institute of Design) ஆகியவற்றுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடந்து வருகிறது. இதில், ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு நவம்பர் 22-ம் தேதி வரையும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.

இதுபற்றிய தகவல்களை பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜேஇஇ, நிட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம், தகுதிகள் உள்ளிட்ட விவரங்களும் சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

x