மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட 5 பல்கலை.களில் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம்


சென்னை: தமிழகத்தில் மதுரை காமராசர் பல்கலை. உட்பட 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிர்வாகத்தை நடத்துவதிலும், மாணவர்களின் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலை.யில் 2 ஆண்டுகளாகவும், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.யில் ஓராண்டாகவும், சென்னை அண்ணா, மதுரை காமராசர் பல்கலை.களில் 4 மாதங்களுக்கு மேலாகவும் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் பல்கலை.களில் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்படுகிறது. முக்கிய முடிவுகளை உடனக்குடன் எடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களும், உயர் கல்வி பயிலும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் கூறும்போது, "விதிமுறைகளின்படி புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம், ஆளுநர், மாநில அரசு சார்பில் 3 பிரதிநிதிகள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும். இக்குழு 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கும். அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார். தற்போது தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஒரு பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதை மாநில அரசு ஏற்காததால். தேடல் குழுவை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது" என்றனர்.

காமராசர் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை முன்னாள் பேராசிரியர் கலைச்செல்வன் கூறும்லோது, "காமராசர் பல்கலை.யில் துணைவேந்தராக இருந்த குமாரின் பதவிக்காலம் முடிய 11 மாதங்கள் இருக்கும்போதே, உடல் நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்பு 4 மாதங்களுக்கும் மேலாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட கன்வீனர் குழு அடுத்தடுத்து மாற்றப்படுவதால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. துணைவேந்தர் இல்லாத சூழலை சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் நிர்வாகச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவை உறுப்பினர் நியமினம் போன்ற பிற பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, துணைவேந்தரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

x