சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை கொண்டு நவம்பர் 11 முதல்20-ம் தேதி வரை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும். இதில், முதல் 3 வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் நவ.21-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உடன்செல்ல வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக இருந்தால், அந்த பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் போட்டியில் அவர்கள் நடுவர்களாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். வட்டார அளவிலான போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.