துப்பாக்கிகளை பயன்படுத்துவது எப்படி? - மாணவர்களுக்கு குன்னூர் ராணுவப் பயிற்சி மையத்தில் செயல் விளக்கம்


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 78-வது காலாட் படை தினத்தையொட்டி பள்ளி மாணவ - மாணவியருக்கு துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 78-வது காலாட்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் பள்ளி மாணவ - மாணவியருக்கு ராணுவத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக ராணுவத்தில் பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், போரில் பயன்படுத்திய பல்வேறு துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக, ரைபிள், எல்எம்ஜி துப்பாக்கி, எம்பி 9 துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், இயந்திர துப்பாக்கி, உட்பட பல்வேறு பழங்கால மற்றும் நவீன துப்பாக்கிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதில், துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் மாணவ - மாணவியருக்கு ராணுவ வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் குழந்தைகள் உட்பட பெண்களும் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை ஏந்தி அதன் செயல் திறன்கள் அறிந்து கொண்டனர்.

பிற்காலத்தில் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக வெலிங்டன் ராணுவ மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

x