காமராஜர் பல்கலையில் மருத்துவ செயல்முறைகளில் பூஞ்சை பயன்பாடு குறித்த சர்வதேச மாநாடு!


மதுரை: காமராஜர் பல்கலையில் மருத்துவ செயல்முறைகளில் பூஞ்சை பயன்பாடுகள் குறித்த சர்வதேச மாநாடு நடந்தது.

இப்பல்கலையின் உயிரியல் அறிவியல் பள்ளி சார்பில், வேளாண்மை தொழில், உயிரியல் மருத்துவ செயல்முறைகளில் பூஞ்சை பயன்பாடுகள் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது. உயிரியல் அறிவியல் பள்ளியின் தலைவர் குமரேசன் வரவேற்றார். காமராஜர் பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனன் தலைமை வகித்தார். அமைப்புச்செயலர் , உதவிப்பேராசிரியர் சண்முகையா சுற்றுச்சூழல் அமைப்பில் பூஞ்சை தவிர்க்க முடியாத உயிர் என பேசினார்.

குடிமாலையான் வளாக வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி மைய இயக்குநர் நக்கீரன் பேசும்போது, ‘நுண்ணுயிர்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது. மனித வமசாவளியிலும் காணப்பட்டது. பூஞ்சை, பாக்டீயா போன்ற நுண்ணுயிரிகளில் இருந்து பல உயிரியல் மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நமது சுற்றுச்சூழலில் நுண்ணுயிரிகள், மூலக்கூறுகள், தாவரம், விலங்கு அமைப்புகளுக்கு இடையே நெருக்கமான ஒரு தொடர்பு உள்ளது. இது, பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாற்றத்தால் பூச்சி, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெவ்வேறு நிலைகளில் நுண்ணுயிர் பொருட்களின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது, ’ என்றார்.

மாநாட்டில் கயானா பல்கலை இயக்குநர் கோமதிநாயகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர நோயியல் நிபுணர் கல்பனா கிருஷ்ணன், பேராசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

x