மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ‘அவுட் சோர்ஸிங்’ முறையில் 10 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - பெற்றோர்கள் அதிருப்தி


மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பெரும்பான்மை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், ‘அவுட் சோர்ஸிங்’ முறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவுட் சோர்ஸிங் முறையில் தற்காலிகமாக பாடப்பிரிவு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இதுபோல் நியமிக்கப்படுவதால் மாணவர்கள் விளையாட்டுத் திறனும் கல்வியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மதுரை மாநகராட்சியின் கீழ் 9 உயர் நிலைப்பள்ளிகள், 15 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவ - மாணவியர் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கான உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கவும் பள்ளிக்கு 2 உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சியில் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லை. அதனால், உடற்கல்வி பாடவேளைகளை மற்ற வகுப்பு ஆசிரியர்கள் எடுத்து பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றனர்.

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்களை, பள்ளி வளாகங்களில் ஒழுங்குப்படுத்துவது, விளையாட்டு திறன்களை மேம்படுத்தி அவர்களை வட்டார, மாவட்டம், மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார்ப் படுத்துவது போன்ற பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், உடற்கல்வி ஆசிரியர்களே மாநகராட்சி பள்ளிகளில் இல்லாததால் மாணவர்கள் விளையாட்டு திறன் மங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 10 உடற்கல்வி ஆசிரியர்களை தற்காலிகமாக ‘அவுட் சோர்ஸிங்’ முறையில் நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் கூறுகையில், "உடற்கல்வி ஆசிரியர் இல்லாத மாநகராட்சிகளில் அவுட் சோர்ஸிங் முறையில் இந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு நபருக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.10,000 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது" என்றார்.

இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், "கடந்த காலங்களில் உடற்கல்வி ஆசியர்கள், பிற பாட ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நிரந்தர பணியிடமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமில்லாது பல்வேறு பாடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. கடந்த சில ஆண்டாக பட்டதாரி, பட்டமேற்படிப்பு ஆசிரியர்களுக்கு பதில் நிரந்தர பணியிடமாக ஆசிரியர்களை நியமிக்காமல் சொற்ப ஊதியத்திற்கு அவுட் சோர்ஸிங் முறையில் பாடப்பிரிவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதனால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக உடற்கல்வி ஆசிரியர்களும் அவுட் சோர்ஸிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நிரந்தரப் பணி ஆசிரியர்களை போல் விரட்டி வேலை வாங்க முடியாது. அதனால், மாணவர்கள் கல்வியும், விளையாட்டு திறமையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றனர்.

x