ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: "இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31ம் தேதியை முன்னிட்டு, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டில் ‘நாட்டின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கலாச்சாரம்’ என்ற கருப்பொருள் அடிப்படையில், வரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையடுத்து உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இது தவிர ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், பட்டிமன்றம், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், இது சார்ந்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொகுத்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x