புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் கழிப்பறை மேற்கூரை காரை விழுந்து மாணவி காயம்


புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு கலைக்கல்லூரி கழிப்பறை மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயம் அடைந்தார். இதைக் கண்டித்து மாணவ - மாணவியர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறை போன்றவை சேதமடைந்திருப்பதாகவும், அதைச் சீர்படுத்த வேண்டும் என மாணவ- மாணவியர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம், அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஹேமலதா என்பவர் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென கழிப்பறையின் மேற்கூரை காரை பெயர்ந்து மாணவியின் தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சக மாணவியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் செய்தி கல்லூரி முழுக்க பரவியதை அடுத்து, கழிப்பறை மேற்பகுதி காரை பெயர்ந்து விழுந்து மாணவி காயமடைந்ததைக் கண்டித்து கல்லூரி மாணவ - மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி எதிரே வழுதாவூர் - புதுச்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த தன்வந்திரி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காயமடைந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை சீரமைக்கவும் மாணவ சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

x