கோவை: “ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது” என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் டி.ஜி.சீதாராம் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் இன்று (அக்.12) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) சார்பில் கிராமப்புற பொறியியல் கல்லூரிகளுக்கு உதவும் வகையில் இரண்டு வேலைவாய்ப்பு இணையதளங்களை உருவாக்கி உள்ளோம். அனைத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் 75,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மேலும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 150 சிந்தனை ஆய்வகங்கள், பல்வேறு பிரச்சினைகளுக்கு மாணவர்கள் தீர்வு காண உதவும்.
மத்திய உயர்கல்வித்துறை மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உருவாக்க சிந்தித்து வருகிறோம். மாணவர்களுக்கு டிஜிட்டல் திறனை மேம்படுத்தும்போது போதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனம் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 7.50 லட்சம் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற போலி பேராசிரியர்கள் நியமனங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏஐசிடிஇ உயர்தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தரமான கல்வி, பொறியாளர்கள் இருப்பதால் தான் சர்வதேச நிறுவனங்கள் தங்களது கிளை அலுவலகங்களை இந்தியாவில் தொடங்கி வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்களை வேலைக்கு தேர்வு செய்து வருகின்றன. ஹேக்கத்தான் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான புதிய சிந்தனைகளும், 6,600-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை அனைத்து படிப்புகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. சிவில் படிப்புகளிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.
இதில் பிரச்சினை என்பது எண்ணிக்கையில் அல்ல. பிரச்சினை என்பது குறைந்த மதிப்பெண் பெறும் சராசரியான மாணவர்களுக்கு கற்பித்தல் என்பது சவாலானதாக உள்ளது. ஏஐசிடிஇ சார்பில் முதுநிலை பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு திட்டத்தின் மூலம் சுமார் 1200 ஆசிரியர்கள் ஐஐடி-யில் பகுதிநேரமாகவும், நேரடியாகவும் படித்து வருகின்றனர். பயிற்சி முடித்த பின்னர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய படிப்புகளுக்கு வகுப்புகளை எடுப்பார்கள். அவர்களுக்கு டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய பயிற்சி வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.