மதுரை மாணவர்களுடன் ஆடி, பாடி ஆஸ்திரேலியா மாணவர்கள் கொண்டாட்டம்


மதுரை: ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து அந்நாட்டு மாணவர்கள், தமிழக மாணவர்களின் வாழ்வியல், கல்வி, பண்பாடு, அறிவு, அன்பு போன்றவற்றை நேரில் கண்டு கற்றுக் கொள்வதற்காக கல்வி சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்.

இந்த சுற்றுலாவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் ஓகில் கல்லூரியில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 23 பேர் வந்துள்ளனர். மதுரை வந்த அவர்கள், துவரிமான் அருகேயுள்ள இளைஞர் நகரில் (பாய்ஸ் டவுன்) புனித லசால் தொழிற்கல்வி நிலையத்திற்கு வந்தனர். இந்த கல்வி நிலையத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்காக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீஷியன், வெல்டிங், பிட்டர் உள்ளிட்ட தொழிற்கல்வி இங்கே வழங்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா மாணவர்கள், இந்த தொழிற் பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களோடு 4 நாட்கள் தங்கி இங்கு படிக்கும் மாணவர்களுடன் இணைந்து மரம் நடுதல், ஓவியம் வரைதல், நடனமாடுதல் உள்ளிட்ட கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் ஆர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இந்த கல்வி சுற்றுலா குறித்து ஆஸ்திரேலிய மாணவர்கள் மோலி, ஃபுளோரியா மற்றும் சைமன், அவர்களோடு உடன் வந்த ஆசிரியர் குளோரியா ரிச்சர்டு கூறுகையில், "இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களைப் பார்க்கும்போது, எங்களுக்கு வியப்பாக உள்ளது. விளிம்பு நிலைக் குடும்பங்களிலிருந்து வந்து இங்கு தொழிற்கல்வி பயில்கின்றனர். அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

எங்களது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியர் எல்லாம் இணைந்து சேமிப்புச் செய்த தொகையை இங்கே வகுப்பறை, கூட்ட அரங்கம், தேவாலயம், சாலை சீரமைப்புப் பணிகளுக்காக செலவு செய்ததுடன், நாங்களே அதன் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டோம். அது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. குறிப்பாக, இந்த மாணவர்கள் தங்களது உடைகளைத் தாங்களே துவைத்து, உலர்த்தி அணிவது எங்களுக்கு வியப்பாக இருந்தது.

அவர்களோடு இணைந்து நாங்களும் எங்களது துணிகளைத் துவைத்தோம். காய்கறிச் சந்தைக்குச் சென்று நாங்களே காய்கறிகள் வாங்கியதும் நல்ல அனுபவம். ஆடல், பாடல் என மிகக் கொண்டாட்டமாய் அமைந்தது. எங்கள் நாட்டில் எங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தாலும் கூட, இதுபோன்ற மகிழ்ச்சியை நாங்கள் அங்கு பெற முடியாது. அந்த வகையில் இந்த பயணம் எங்களுக்கு மிக இனிமையாகவும், அனுபவம் மிக்கதாகவும் அமைந்தது," என்றனர்.

தொடர்ந்து இந்த ஆஸ்திரேலியா மாணவர்கள், சிவகங்கை மாவட்டம் சூராணத்திற்கும் சென்ற ஆஸ்திரேலிய மாணவர்கள், அங்குள்ள தேவாலய புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களோடு கலந்து பழகி, அவர்களது அன்றாட வாழ்க்கை முறை குறித்தும் அறிந்து கொண்டனர்.

x