இந்திய கடல்சார் பல்கலை. 9-வது பட்டமளிப்பு விழா: 2 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றனர்


சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்புவிழாவில் 1,974 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உத்தண்டியில் அதன்தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர் தலைமை தாங்கினார்.

கடல் தொடர்பான பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,974 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில் 4 பேர் பிஎச்டி பட்டமும், ஒருவர் எம்எஸ் பட்டமும் பெற்றனர்.

பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை விருந்தினரான இந்திய வெளியுறவுத் துறைமுன்னாள் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முன்னதாக, துணைவேந்தர் மாலினி வி.சங்கர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து பேசும்போது, ``கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தேசியமற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் 5-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக இணை துணைவேந்தர் ராஜூ பாலாஜி, பதிவாளர் கே.சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிஷோர் தத்தாத்ரேயா ஜோஷி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

x