நெல்லையில் 4,085 மாணவிகள் பயிலும் கல்லணை மாநகராட்சி பள்ளி: அடுக்கடுக்காக வெடிக்கும் பிரச்சினைகள்


திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆசிரியைகள். | படம்: மு. லெட்சுமி அருண் |

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 4,085 மாணவிகள் பயிலும், கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மாநகராட்சி துணை மேயர் கே.ராஜுவிடம் அப்பள்ளி ஆசிரியைகள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் அளித்த மனு: கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாநகரில் சிறந்த கல்வித் தரத்துடன் விளங்குகிறது. 4,085 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2019-2020-ம் கல்வி யாண்டில், 12 வகுப்பறைகள் அமைப்பதற்காக, தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. 2022-23-ம் கல்வி ஆண்டில் 6, 7-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்றன. இதனால், 6-ம் வகுப்பில் 540 ஆக இருந்த மாணவிகள் எண்ணிக்கை, 2023-24-ம் கல்வியாண்டில், 380 ஆக குறைந்தது.

தற்போது பிரிவுகளை குறைத்தும், வகுப்பறையில் மாணவிகளின் எண்ணி க்கையை அதிகரித்தும், விளையாட்டுத் திடலில் மாணவிகளை அமர வைத்தும் கல்வி கற்பிக்கும் நிலையுள்ளது. தற்போது நடைபெறும் கட்டுமானப் பணியில், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் தலா 4 வீதம் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மூலம் வகுப்பறைக்கு 10 வீதம், 40 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் மேலும் 4 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படும் பழைய ஆய்வகத்தை அகற்றி விட்டு, ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகமும், முதல் தளத்தில் நான்கு வகுப்பறைகளும் அமைக்க வேண்டும். போதுமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

எழுதும் மேஜை மற்றும் அமரும் பெஞ்ச் ஆகியவை துருப்பிடித்துவிட்டன. இதனால், மாணவிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, டெஸ்க், பெஞ்சுக்கு உடனடியாக வர்ணம் பூசி தர வேண்டும். 5 வகுப்பறைகளுக்கு கதவு இல்லாததால் தெருநாய்கள் புகுந்து விடுகின்றன. இரு வகுப்பறைகளில் கரும்பலகை இல்லாத தால், சுவரில் கருப்பு வர்ணம் மட்டும் பூசப்பட்டு உள்ளது. அதில் எழுத இயலாத நிலை உள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு அருந்தும் நிலையில், சமையலறை விரிசல் விழுந்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

பாழடைந்த கழிவறைகளை சீரமைக்க வேண்டும். கழிவறைகளில் மேல்நிலைத் தொட்டிகள் சிறிதாக இருப்பதால், அடிக்கடி தண்ணீர் காலியாகி விடுகிறது. எனவே, மேல்நிலைத் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 6 கேமராக்கள் அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாத நிலை காணப்படுகிறது. இப்பிரச் சினைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

x