புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளியில் ‘ஏஆர் லூபா 3டி’ தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் கற்பிப்பது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் மாதத்தின் கடைசி நாளில் புத்தக பை இல்லா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் மாணவர்கள் புத்தக பைகள் இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்து கைவினைப் பொருட்கள் செய்தல், விளையாட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்க பள்ளியில் 3டி தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் கற்பித்து மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஆங்கில பாட ஆசிரியையான லோகபிரியா ‘ஆர் லூபா’ என்ற ஆப் மூலம் 3 டி தொழில்நுட்பத்தில், 2ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பல விதமான செமுறைகளை நடத்திக் காண்பித்துள்ளார். குறிப்பாக, யானை, புலி, குதிரை, முயல், சிறுத்தை, மாடு, ஒட்டக சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் நிழல்படங்களை மாணவர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
அப்போது, அந்த விலங்குளை பற்றியும், அதன் குணாதிசயங்கள் பற்றியும் ஆசிரியை விளக்கினார். மாணவர்களும் ஒவ்வொரு விலங்கு குறித்தும் தெளிவாக படித்துக்கொண்டதுடன் அவை குறித்தும் பேசினர். அரசுப் பள்ளி ஆசிரியையின் இந்த புதுவிதமான பாடம் கற்பித்தல் முறையானது மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.