121 வேட்பாளர்கள் படிப்பறிவு அற்றவர்கள்... மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களும், அவர்களின் கல்வித் தகுதியும்!


மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்றும், 359 பேர் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், தேர்தல் உரிமை அமைப்பொன்று பகிர்ந்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வியறிவு அவசியமா இல்லையா என்பது நீடித்த விவாதமாக தொடர்ந்து வருகிறது. வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணியைக் கூட சகித்துக்கொள்ளும் பொதுவெளி, அவர்களின் கல்வித்தகுதியை பெரிதும் கேள்விக்குள்ளாக்குகிறது. படிப்பறிவு அதிகம் பெறாத காமராஜர் போன்றவர்கள் தமிழகத்தின் கல்வி விழிப்புணர்வுக்கு ஆற்றிய சேவைகள் இந்த விவாதத்தை இன்னமும் கூர்மையாக்குகின்றன. ஆனால் விதிவிலக்கு என்பது வெகு சொற்பமே.

கல்வியறிவு

வளரும் தேசத்தின் அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு மெத்தப்படித்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பது மக்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது. இவற்றின் மத்தியில் மக்கள் பிரதிநிதிகள் பலரின் போலி கல்விச் சான்றிதழ்கள் கடும் விமர்சனத்துக்கும் ஆளாகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் குறித்து, போதிய அடிப்படை அறிவு இல்லாத மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகிறார்கள். இவற்றின் மத்தியில், நடப்பு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித்தகுதி குறித்தான விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியும், ஆச்சரியமும் தந்துள்ளன.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8,360 வேட்பாளர்களில் 8,337 பேரின் கல்வித் தகுதியை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் உரிமை அமைப்பு ஆய்வு செய்துள்ளது. உதாரணத்துக்கு, முதல் கட்டத் தேர்தலில், 639 வேட்பாளர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை 5 -12 வகுப்புகளுக்கு இடையே பெற்றுள்ளனர்; 836 வேட்பாளர்கள் பட்டதாரி நிலை அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைக் கொண்டுள்ளனர். 36 வேட்பாளர்கள் வெறும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும், 26 பேர் படிப்பறிவற்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் 4 பேர் தங்கள் கல்வித் தகுதியை வெளியிடவில்லை.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

இந்த வகையில் 7 கட்டங்களாக நடைபெறும் நடப்பு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோரில் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்றும், 359 பேர் தாங்கள் 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 647 வேட்பாளர்கள் 8ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், 1,303 பேர் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதவர்கள், 1,502 பேர் பட்டம் பெற்றவர்கள். மிகவும் சொற்ப எண்ணிக்கையில் 198 வேட்பாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x