தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், கர்னூலைச் சேர்ந்தவர் கரசலா ராகுல்(21). இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஹோஸ்கரேஹள்ளி அருகே உள்ள புகழ்பெற்ற பிஇஎஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்லாரியில் குடியேறியது. பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த ராகுல், ஐந்தாவது செமஸ்டர் படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் வீடு வாடகைக்கு எடுத்து தாயுடன் ராகுல் வசித்து வந்தார். நேற்று அவருக்கு தேர்வு நடைபெற்றது. அப்போது அவர் தேர்வுக்கு தாமதமாக வந்ததாக கூறி, அவரை தேர்வு எழுத பேராசிரியர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நன்றாக படிக்கும் ராகுல் மனமுடைந்தார். பேராசிரியர்களிடம் கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த ராகுல், பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பரப்பன அக்ரஹாரா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்து கொண்ட ராகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராகுலின் தாய் கூறுகையில், காலை 8.30க்கு தேர்வு தொடங்க இருந்ததால் 7.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தேர்வுக்கு தாமதமாக வந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹோஸ்கரேஹள்ளி அருகே உள்ள பிஇஎஸ் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 2023-ம் ஆண்டில், ஆதித்யா பிரபு(19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இரண்டாவது தற்கொலை பிஇஎஸ் கல்லூரியில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!
வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!