மாநகராட்சி பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி பூங்கோதைக்கு இலவசமாக கல்லூரி படிப்பை படிக்க எத்திராஜ் மகளிர் கல்லூரி சீட் வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் என்பவரின் மகள் பூங்கோதை. சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், இந்த ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 578 மதிப்பெண்கள் எடுத்தார். இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து மிகவும் சிரமப்பட்ட போதும் தன் முழு விடாமுயற்சியால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார். இவரை, எத்திராஜ் கல்லூரி சேர்மன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருப்பமான துறையை தேர்வு செய்து படிக்க முழு உதவியும் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாணவி பூங்கோதை, எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரனை இன்று சந்தித்தார். பின்னர் பேசிய பூங்கோதை, "தந்தை மிகவும் கஷ்டப்பட்டுதான் என்னையும், எனது அக்காவையும் படிக்க வைத்து வருகிறார். இந்த கடினமான குடும்ப சூழ்நிலையில் இக்கல்லுரியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்று இருக்கும் மாணவிகளுக்கு, நான் ஒரு நல்ல நிலைக்கு சென்று உதவுவேன். தனக்கு சிஏ படிக்க விருப்பம் உள்ளது. தற்போது எத்திராஜ் கல்லூரி அளித்துள்ள வாய்ப்பு மூலம் பி.காம் படிப்பில் நிர்வாக வணிகவியல் மேலாண்மை துறை தேர்ந்தெடுத்து உள்ளேன்" என்றார்.
இதுகுறித்து பேசிய எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன்,"அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு கல்லூரியில் அவர்கள் விரும்பும் துறையில் சீட் அளித்து முழு கல்லூரி கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு அது ஊக்குவிப்பாக இருக்கும். இதே போல் மற்ற தனியார் கல்லூரிகளும் ஒரு சீட்டாவது வழங்கினால் சிறப்பாக இருக்கும். மாணவி பூங்கோதை நன்றாக படித்து இக்கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!