பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, முத்தாக்கியின் ஒரே மகள் மீனா(14). இவர் சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மட்டும் படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்குப் பள்ளியில் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியில் வீட்டில் இருந்த மீனாவை ஓம்காரப்பா(30) என்ற வாலிபர் வீடு புகுந்து இழுத்துச் சென்றுள்ளார். பெற்றோர் முன்னிலையில் அவர் மீனாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலையைத் துண்டித்து வீசியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடகு கூடுதல் எஸ்.பி- சுந்தர்ராஜ் விரைந்து சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதன்பின் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோம்வார்பேட்டை போலீஸார் அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தடய அறிவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் எதற்காக இக்கொலை நடைபெற்றது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மைனர் பெண்ணான மீனாவிற்கும், ஓம்காரப்பாவிற்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மீனாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு வயது 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்தது. இதனால், 18 வயது நிரம்பிய பிறகே மீனாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி செய்வதாக மீனாவின் பெற்றோர் உறுதியளித்தனர். இதனால் சமூக நலத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தனது திருமண நிச்சயதார்த்தம் நின்று போன ஆத்திரத்தில் இருந்த ஓம்காரப்பா, சில மணி நேரங்களிலேயே மீனாவை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாகியுள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மகிழ்ச்சியில் இருந்த மாணவியை தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.