‘ஆர்எஸ்எஸ் பின்னணி மட்டுமே துணை வேந்தர் நியமனத்துக்கு அடிப்படை’ என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு எதிராக பாஜக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கூட்டாக ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
’பாஜக ஆட்சியின்போது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் என்பது தகுதியின் அடிப்படையில் அல்லாது, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக’ காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார். இதற்கு எதிராக முன்னாள் மற்றும் இன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உட்பட 181 கல்வியாளர்கள் கிளம்பியுள்ளனர். ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
"வெளிச்சம் தருவோர் எரிக்கப்படுகிறார்கள்" என்ற தலைப்பிலான ஒரு பகிரங்க கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படும் செயல்முறை மற்றும் அவர்களின் தகுதியை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியது தொடர்பாக கண்டனம் பதிவிட்டுள்ளார். "அத்தகைய கூற்றுக்களை நாங்கள் திட்டவட்டமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். ’அரசியல் மைலேஜ் பெறு நோக்கில் பொய் மற்றும் அவதூறுகளை ராகுல் காந்தி பரப்புவதாகவும்’ அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பாஜக ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை; ஆளும் பாஜகவின் சித்தாந்த முதுகெலும்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன்(ஆர்எஸ்எஸ்) அவர்கள் பிணைந்திருப்பதன் அடிப்படையிலேயே அவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் முன்னதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் ராய்ப்பூர் இயக்குனர் ராம் குமார் ககானி உள்ளிட்ட பலர் அந்த பகிரங்க கடித்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர். துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில், கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் கீழும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
"அறிவின் பாதுகாவலர்கள் மற்றும் கல்வித்துறையின் நிர்வாகிகள் என்ற வகையில், நிர்வாக ஒருமைப்பாடு, நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் உச்ச நிலைகளைப் பேணுவதில் நாங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பேணுகிறோம். புனைகதைகளிலிருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்பதற்கும், ஆற்றல்மிக்க மற்றும் உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்கும் எங்கள் இலக்கை நன்கு அறிந்த, ஆக்கபூர்வமான உரையாடலில் பங்கேற்குமாறு, சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். உயர்கல்வித் துறையில் தகுதி, ஒருமைப்பாடு மற்றும் சிறந்து விளங்கும் கொள்கைகளுக்கான எங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்றும் அந்த கடிதத்தில் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.