சின்னத்துரையின் உயர்கல்விக்கு துணை நிற்பேன்; அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!


அமைச்சர் அன்பில் மகேஷ்

சாதிய வன்மத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.

நாங்குநேரி மாணவனுடன் திருமாவளவன்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி - அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், இவர்களது வீட்டுக்குள் நுழைந்த 3 பேர், சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த இருவரும், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர். விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாணவர் சின்னதுரை பெற்ற மதிப்பெண்கள்

தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த சின்னத்துரை, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதையடுத்து மாணவர் சின்னத்துரையைத் தொடர்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தனது எக்ஸ் தளத்தில், 'நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

x