பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பெற்றுள்ளது.
சுமார் 7.60 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.56 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கே தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளதால், கோடை வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 96.44 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.07% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97. 42 சதவீதம் தேர்ச்சியுடன் 2-ம் இடம் பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதத்துடன் 3-ம் இடம் பிடித்துள்ளது.
தமிழக பாடதிட்டத்தில் தேர்வு எழுதிய புதுச்சேரியில் 93.38% மாணவர்களும், காரைக்கால் மாவட்டத்தில் 87.03 சதவீதம் மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்னும் ஒரு வாரத்தில் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து கல்லூரி சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் 26,352 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தமிழில் 35 பேர், ஆங்கிலத்தில் 7 பேர், இயற்பியலில் 633 பேர், வேதியலில் 471 பேர், உயிரியலில் 652 பேர், கணிதத்தில் 2,587 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணினி அறிவியலில் 6,996 பேரும், வணிகவியலில் 6,142 பேரும், கணக்குப்பதிவியலில் 1,647 பேரும், பொருளியலில் 3,299 பேரும், கணினி பயன்பாடுகளில் 251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 210 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.