சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கான உத்தேச நாள் அறிவிப்பு; இணையத்தில் ரிசல்ட் பார்ப்பது எப்படி?


சிபிஎஸ்இ மாணவிகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 12 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இன்றைய தினம் இந்த தேர்வு முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. இதனிடையே இன்றைய தினம், உத்தேச தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே.1 அன்று வெளியாகும் என, கடந்த வாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிகம் அலைக்கழித்த வதந்திக்கு அப்பால், இன்றைய தினம்(மே.3) தேர்வு முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டன.

சிபிஎஸ்இ தேர்வு

சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளமும் தேர்வு முடிவு அறிவிப்புகளுக்கான அறிகுறிகளை கொண்டிருந்தது. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்கான பிரத்யேக தளம், மே.20-க்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தங்கள் தளத்தில் ஒற்றை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, ​​வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். கூடுதலாக, digilocker.gov.in மற்றும் results.gov.in தளங்களிலும் அணுகி அறிந்து கொள்ளலாம்.

முன்னதாக சிபிஎஸ்இ10-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று தொடங்கி மார்ச் 13 வரை நடந்து முடிந்துள்ளன. இதே போன்று 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2, 2024 வரை நடத்தப்பட்டன. 2024-ம் ஆண்டில் மட்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளுக்கு சுமார் 39 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

சிபிஎஸ்இ

இணையத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதோடு, ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். ஆனால் இந்த சான்று தற்காலிகமானது. அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் தங்கள் பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த 2023-ம் ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 12 அன்று அறிவிக்கப்பட்டன. அதற்கு முந்தைய 2022-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியாயின. இம்முறை சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இணையத்தில் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

  • cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.

  • முகப்புப்பக்கத்தில் ’Examinations’ அல்லது ‘Results’ என்ற பகுதியைப் பார்க்கவும்.

  • 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு என்பதில் பொருத்தமான இணைப்புகளை க்ளிக் செய்யவும்.

  • வழங்கப்பட்ட கட்டங்களில் மாணவரது எண், பிறந்த தேதி உள்ளிட்ட அவசிய அடிப்படைத் தகவல்களை உள்ளிடவும். பின்னர், ’Submit’ அல்லது ‘Check Results’ உள்ளிட்ட பொத்தான்களைக் க்ளிக் செய்யவும்.

  • அங்கே மாணவருக்கான தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

  • தேவையின் அடிப்படையில் இந்த தேர்வு முடிகளை தரவிறக்கிக்கொள்ளவோ அச்சிட்டுக்கொள்ளவோ செய்யலாம்.

  • x