10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என பள்ளிக் கல்வித்துறைக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் துணைத் தேர்வின்போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வை தவறவிட்ட மாணவர்களும், தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களும் உடனடியாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலேயே தேர்ச்சி பெற்று தங்கள் உயர்கல்வியை தொடர முடியும் என்பதால் மாணவர்களும் கல்வியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.