கபிலர் பாடிய 99 வகையான சங்க இலக்கிய பூக்கள்... தாம்பூல தட்டில் வரைந்து மாணவி சாதனை!


சங்க இலக்கியத்தில் புலவர் கபிலர் பாடிய காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி உள்ளிட்ட 99 தமிழ் பூக்களையும் தனித் தனியாக 99 தாம்பூல தட்டில் வண்ணமயமாக வரைந்து தீக்‌ஷனா எனும் 9ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.

நெல்லை திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்-ஜனனி தம்பதியர். இவர்களது மகள் தீக்‌ஷனா. இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு ஓவியத்தில் பல சாதனைகள் செய்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி படத்தை ஒரு மணி நேரத்தில் எண்ணெய்யால் வரைந்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் 150 சதுர அடி உயரத்தில் மண்ணினால் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை வரைந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

காந்தள் மலர்

இதனைத் தொடர்ந்து அடுத்த சாதனை நிகழ்வாக சங்க இலக்கியத்தில் புலவர் கபிலர் பாடிய காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி உள்ளிட்ட 99 தமிழ் பூக்களையும் தனித் தனியாக 99 தாம்பூல தட்டில் வண்ணமயமாக வரைந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இதனைக் காட்சிப்படுத்தும் நிகழ்வு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது. சாதனை கண்காட்சி அரங்கை மாவட்ட அறிவியல் அதிகாரி முத்துக்குமார் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாறும்பூ நாதன், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவி தீக்‌ஷனாவை பாராட்டினார். மேலும், ஓவியக் கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

காட்சிக்கு வைக்கப்பட்ட தீக்‌ஷனாவின் படைப்புகள்

இந்த சாதனை குறித்து மாணவி தீக்‌ஷனா கூறுகையில், "எனது மூன்றாவது சாதனையாக தமிழ் பூக்கள் 99 என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தில் புலவர் கபிலர் பாடிய 99 பூக்களையும் தொகுத்து எடுத்து தனித்தனியாக 99 மலர்களையும் வரைந்து உள்ளேன். இந்த பூக்களை தாம்பூலத்தில் வரைய காரணம், கபிலர் ஆரிய அரசன் பிரக்தனுக்கு தமிழரின் பெருமையை உணர்த்தும் வகையில் 99 பூக்களை ஒரே பாடலாக பாடியுள்ளார். தமிழ் கலாச்சாரப்படி தாம்பூலம் வைத்து வரவேற்பது நமது வழக்கம். அதனை மையப்படுத்தும் விதமாக தாம்பூலத்தில் வரைந்துள்ளதாகவும், தொடர்ந்து ஓவியத்தில் சாதனைகள் படைக்க ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x