பள்ளி மாணவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கூடாது என எச்சரித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையமான என்சிபிசிஆர், பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. பள்ளிகளில் அதிகபட்ச தண்டனை ஒழிப்பு வழிகாட்டு நெறிமுறை என்று அழைக்கப்படும் ஜிஇசிபி வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ பாதிக்கும் வகையிலான தண்டனைகள் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என என்சிபிசிஆர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவின் மீது நேற்று முன் தினம் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜிஇசிபி வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இன்று சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளது.
அதில் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் அக்குழு மாணவர்கள் மீதான இது போன்ற அதிகபட்ச தண்டனை தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்ளும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு காயம், வலி, வேதனை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த அதிகபட்ச தண்டனையும் வழங்கப்படக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களை அடித்தல், உதைத்தல், பிராண்டுதல், கிள்ளுதல், கடித்தல், தலை முடியை பிடித்து இழுத்தல், காதுகளை பிடித்து இழுத்தல், அறைதல் ஆகியவற்றை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குச்சி, காலணி, சாக் பீஸ், டஸ்டர்கள், பெல்ட், சாட்டை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்களை அடிக்கக் கூடாது எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பது அல்லது அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் அவதூறாக பேசுவது போன்றவற்றை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுக்குழுவைக் கூட்டி அதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.