உத்தரபிரதேசம் ஜான்பூரில் ’ஃபார்மஸி’ கல்லூரி மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று தேர்வுத்தாள் முழுக்க நிரப்பி வைத்ததும், அதற்கு பேராசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கியதும் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்கள் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் ஜான்பூரில் உள்ள உத்தரபிரதேச மாநில பல்கலைக்கழகமான ’வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக’த்தில், விடைத்தாள் முழுக்க ஜெய் ஸ்ரீராம் என நிரப்பிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ-யைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மருந்தியல் பாடப்பிரிவின் சில மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அப்போது அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
டிப்ளமோ இன் பார்மசி படிப்பின் சில மாணவர்களின் விடைத்தாள்கள் நெடுக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகமே இருந்தது. இடையிடையே அந்த மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் கிறுக்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு அப்பால், வினாத்தாளில் கேட்ட கேள்விகளுக்கு உரிய விடை என்று எதுவும் இடம்பெறவில்லை.
ஆனால் இந்த மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்டு முறைப்படி அந்த மாணவர்களின் விடைத்தாள்களை மீண்டும் திருத்தியதில், மாணவர்கள் அனைவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கும் இந்த குட்டு உத்தரபிரதேசத்தை உலுக்கி வருகிறது.
ஆர்டிஐ தாக்கல் செய்த முன்னாள் மாணவர், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநருக்கு ஆர்டிஐ விவரங்களை அனுப்பியதோடு, இவை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ராஜ்பவன் உத்தரவின் பேரில் இது குறித்து விசாரணை நடத்த பல்கலைகழகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட துறையின் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 மாணவர்களுக்கு முறைகேடாக உதவியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின் அறிக்கை கிடைத்ததும் அந்த பேராசிரியர்கள் முறைப்படி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!