குல்லாவைக் கழட்டச் சொல்லி இஸ்லாமியர் மீது தாக்குதல்... மீரட் கல்லூரியில் பரபரப்பு!


சாஹிலை தாக்கும் மாணவர்கள்

மீரட் கல்லூரியில் இஸ்லாமிய இளைஞரின் குல்லாவை அகற்றக்கூறி கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள என்ஏஎஸ் கல்லூரியில் படிக்கும் தனது தங்கையின் கல்லூரிக் கட்டணத்தை சாஹில் என்ற இஸ்லாமிய இளைஞர் சென்றார். அவரை கல்லூரி வாசலிலேயே சில இளைஞர்கள் சுற்றி வளைத்து அவர் அணிந்திருந்த குல்லாவை அகற்றச் சொல்லி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சாஹிலின் சகோதரி தாக்குதலில் இருந்து தனது சகோதரரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஒரு இளைஞர் செங்கலைக் கொண்டு சாஹிலை தாக்க முயற்சி செய்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சாஹில் கூறுகையில், " எனது சகோதரியின் கல்விக் கட்டணத்தைக் கட்ட கல்லூரி சென்றேன். அப்போது சில இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு நான் அணிந்திருந்த குல்லாவை அகற்றச் சொன்னதுடன், கன்னத்தில் அறைந்தனர். அத்துடன் கொலைமிரட்டல் விடுத்ததுடன் மதத்தைப் பற்றி தவறாக பேசினர்" என்றார்.

இத்தாக்குதல் தொடர்பாக சாஹிலின் சகோதரி காவல் துறையில் அளித்த புகார்அளித்துள்ளார். இதன் பேரில், மீரட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய இளைஞரின் குல்லாவைக் கழட்டச் சொல்லி கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தி வீடியோ வைரலாகி வருவதால் மீரட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x