அரசு பள்ளி மாணவனை அடித்து வகுப்பறைக்கு வெளியே தூக்கி வீசியது தொடர்பாக நான்கு ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள யமுனா விஹார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தற்காக சுபம் ராவத் என்ற ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார். தான் செய்த தவறுக்கு மாணவன் மன்னிப்பு கேட்டும் ராவத் தனி அறைக்கு அந்த மாணவனை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மேலும் சில ஆசிரியர்களுடன் சேர்ந்து ராவத், மாணவனை வகுப்பறையைப் பூட்டி தாக்கியுள்ளார். இதன் பின் அந்த மாணவனை வகுப்பறைக்கு வெளியே வீசியுள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் படிக்க விடமாட்டோம் என ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர்.
அந்த மாணவனின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்ட அவனது பெற்றோர் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது வகுப்பறையில் நடந்த விஷயங்களை மாணவன் அழுது கொண்டே சொல்லியுள்ளார். ராவத், அனுபம், எஸ்.எஸ்.பாண்டே மற்றும் நிஷாந்த் ஆகிய நான்கு ஆசிரியர்கள் தன்னைத் தாக்கி வகுப்பறையை விட்டு வெளியே வீசினர் என்று மாணவன் கூறியதைக் கேட்டு அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் அவர்கள் புகார் செய்துள்ளனர். தங்கள் மகன், அந்த ஆசிரியர்களுக்குப் பயந்து பள்ளிக்குச் செல்ல மறுப்பதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து ராவத், அனுபம், எஸ்.எஸ்.பாண்டே மற்றும் நிஷாந்த் ஆகிய நான்கு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவனை ஆசிரியர்கள் ரவுண்டு கட்டி அடித்த சம்பவம், யமுனா விஹார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.