திருடி என நெற்றியில் எழுதி ஊர்வலம்... மனமுடைந்த மாணவி 3வது மாடியில் இருந்து குதித்தார்!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா

பஞ்சாப்பில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மாடியில் இருந்து குதித்தற்கு பள்ளி நிர்வாகத்தின் டார்ச்சர் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் மாநிலம், லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி சோனியா( 13, பெயர் மாற்றப்பட்டுள்ளது) படிக்கிறார். அவர் பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவரது இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மாடியில் இருந்து குதித்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என, சோனியாவின் குடும்பத்தினர், உறவினர்கள், சமூக சேவகர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்," கடந்த 6 நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் மாணவி சோனியாவின் நெற்றி மற்றும் கைகளில் திருடன் எழுதி அவளை பள்ளியைச் சுற்றி வரவைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சோனியா பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவர் படுகாயமடைந்துள்ளார்.

மாணவியின் மருத்துவச் செலவுக்காக பள்ளி நிர்வாகம் ஒன்றரை லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. அத்துடன் மாணவியின் தந்தையை மிரட்டி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். எனவே, பள்ளி நிர்வாகம் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.

x