மாவட்ட ஆட்சியர் பூங்காவில் திடீர் விசிட்... சுற்றித்திரிந்த மாணவர்கள் அதிர்ச்சி


மாணவர்களை கண்டித்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பூங்காவில் சுற்றித்திரிந்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கண்டித்து அனுப்பி வைத்தார்.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலர் வகுப்புகளை கட் அடித்துவிட்டு நகராட்சி பூங்காவில் சுற்றித் திரிவது வழக்கமாகியுள்ளது. அண்மையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன், மற்றொரு ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்றார். அதிலும் பாதி மாணவர்கள் ஆசிரியரை கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் பூங்கா உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் போதையில் மயங்கிக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களை கண்டித்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி

மயிலாடுதுறை நகர்பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணி குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு மையத்தில் அமைந்துள்ள வரதாச்சாரியார் நகராட்சி பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளை புறக்கணித்து, சுற்றித் திரிந்தனர்.

இதையடுத்து அவர்களை அருகே அழைத்து பள்ளிக்கு செல்ல வேண்டியதன் அவசியம், கல்வியின் தேவை உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி அறிவுரை கூறினார். அத்துடன் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட காவலர்களை அழைத்து, பூங்கா உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி ரோந்து பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார்.

x