அவலம்... வானமே கூரை... மரத்தடியில் நடக்கும் அரசுப்பள்ளி... கவனிப்பாரா விழுப்புரம் கலெக்டர்?


மரத்தடியில் பயிலும் மாணவ மாணவிகள்

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் உயர் நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

விழுப்புரம் அருகே உள்ளது குண்டலப்புலியூர் கிராமம். இங்கு இயங்கி வந்த அரசு நடுநிலைப் பள்ளியானது கடந்த 6 வருடங்களுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து குண்டலப்புலியூர்,சிறுவாலைதாங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இதுநாள் வரையிலும் உயர்நிலைப்பள்ளிக்கான கூடுதல் கட்டிட வசதியை கல்வித்துறை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் ஏற்கெனவே நடுநிலைப்பள்ளியாக இருந்த அதே கட்டிடங்களில் உயர்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும் தனி கட்டிடங்களாக பிரித்து அங்குள்ள 4 கட்டிடங்களில் 10 வகுப்பறைகளும் சேர்ந்து இயங்கி வருகின்றன.

இந்த வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாவதால் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே கட்டிட சுவர்கள் விரிசலுடன் காட்சியளிக்கிறது. கட்டிட மேற்கூரை சிமென்ட் பூச்சுகளும் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி இல்லாததால் பல சமயங்களில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயிலும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் சில நாட்களாக அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அம்மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், இவ்விஷயத்தில் தலையிட்டு குண்டலப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் அப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதியை விரைந்து கட்டித்தருவதோடு, அங்கு போதுமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x