ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதை காரணமாக்கி, பிளஸ் 2 மாணவி ஒருவரை தேர்வுக்கு அனுமதிக்காது பள்ளி நிர்வாகம் அராஜகம் செய்துள்ளது.
நாடெங்கும் பள்ளிப் பருவத்து மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியில் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் அதன் மூலமாக ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் இந்த மாணவ மாணவியர் துடிப்பாக இயங்கி வருகின்றனர். இவர்களில் பிளஸ் 2 தேர்வெழுத சென்ற ஒரு ராஜஸ்தான் மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் தேர்வு எழுத அனுமதிக்காது திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதற்கு பள்ளி நிர்வாகம் சொன்ன காரணம் வினோதமானது. மாணவியின் வாழ்க்கையை நொடிக்கச் செய்யும் அளவுக்கு விசித்திரமானது. ஊடகங்களுக்கு பெயர் தெரிவிக்கப்படாத அந்த மாணவி, கடந்தாண்டு பெரும் பாதிப்புக்கு ஆளானவர். கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அந்த மாணவி, அதிலிருந்து உடலளவிலும், மனதளவிலும் மீண்டு வர பல மாதங்கள் ஆனது. பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அந்த மாணவி, படிப்பின்மீதான ஆர்வத்தில் பின்னர் பிளஸ் 2 தேர்வெழுத தயாரானார்.
பாலியல் பலாத்காரத்திலிருந்து மீண்டு அன்றாட வகுப்புகளுக்கு வர எத்தனித்த மாணவியை, அவர் மீது ஆர்வம் காட்டுவதுபோன்று பள்ளி நிர்வாகம் மறித்தது. ’உனக்கு மட்டும் சிறப்பு அனுமதி. நீ தேர்வு வரை வீட்டிலிருந்தே படிக்கலாம். பள்ளிக்கு வந்து சிரமப்பட தேவையில்லை. சக மாணவிகள் மத்தியில் சஞ்சலம் கொள்ள வேண்டியதில்லை’ என அறிவுறுத்தியது. அதன்படி வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாரான அந்த மாணவி, பிளஸ் 2 தேர்வு ஆரம்பித்த நாளில் தேர்வு மையமான தனது பள்ளியை அணுகியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
’அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதிப்பது பள்ளி சூழலை பாதிக்கும்; இதர மாணவிகளின் பெற்றோர் ஆட்சேபம் தெரிவிப்பார்கள்’ என்று கூறி பள்ளிக்குள் அனுமதிக்காது வெளியே விரட்டியது. உடைந்து போன அந்த மாணவிக்கு இன்னொரு ஆசிரியை உதவ முன்வந்தார். அதன்படி குழந்தைகள் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு மாணவி புகாரளித்தார். அஜ்மீரில் உள்ள குழந்தைகள் நல ஆணையம் இது தொடர்பாக களத்தில் இறங்கி விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது, மாணவியை தேர்வுக்கு அனுமதிக்க மறுத்தது தொடர்பாக பள்ளி நிர்வாகம் புதிய காரணம் கற்பித்தது. அதன்படி, நீண்ட காலமாக வகுப்புகளுக்கு மாணவி வராததால் அவரது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் புதிய காரணம் சொன்னார்கள். “தற்போது விசாரணை நடந்து வருகிறது. மாணவி தனது போர்டு தேர்வுக்கு வருவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை" என்று குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவியான அஞ்சலி ஷர்மா உறுதியளித்துள்ளார்.ஆனால், மாணவி மீண்டும் தேர்வெழுத ஓராண்டு காத்திருக்க நேரலாம்.
மாணவப் பருவத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அந்த சிறுமி அதிலிருந்து தன்னை ஒருவாறாக மீட்டதோடு, படிப்பின் மூலம் தனது துயரமான கடந்தகாலத்திலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளத் தயாரானார். ஆனால் அதற்கு வழியின்றி அலட்சிய பள்ளி நிர்வாகம், மாணவியை தேர்வெழுத விடாது கதவடைத்து இருக்கிறது. கல்வித்துறையின் சிறப்பு ஏற்பாட்டு மூலம் இந்த ஆண்டே மாணவி தேர்வெழுத ஏற்பாடு செய்வார்களா என மாணவியின் பெற்றோர் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!
இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!