தமிழகத்தில் பள்ளிகளின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்


சென்னை: பள்ளிகளின் தினசரி நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிவுறுத்தினார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் டாக்டர் மா.ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், பள்ளி பார்வை ஆய்வறிக்கை உட்பட பல்வேறு அம்சகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அதன்பின் இக்கூட்டத்தில் செயலர் மதுமதி பேசியதாவது: "தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். மேலும், வங்கி, தபால் நிலையங்கள் வாயிலாக தொடங்கப்படும் சேமிப்புக் கணக்கு பணிகளை கண்காணித்து அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக இடிக்க வேண்டும். காலாண்டு விடுமுறையில் பள்ளி வளாகத்தில் உள்ள செடிக் கொடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

அதேபோல், பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக, நீண்ட காலமாக விடுப்பில் உள்ள மாணவர்களை கண்காணித்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறாதபடி பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இதில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் பாடத் திட்டங்களை நிர்ணயம் செய்யப்பட்ட கால அவகாசத்துக்குள் முடித்து திருப்புதல் தேர்வுகளை சரியாக நடத்த வேண்டும். அதனுடன், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்காக தனியாக வினா வங்கியை உருவாக்கி அவர்களை தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்ப்படுத்த வேண்டும்" என்று மதுமதி கூறினார்.

x