புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தர் நியமன நேர்காணல்: தலைமை தேர்தல் ஆணையருக்கு சிபிஎம் கடிதம்


புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு அவசர, அவசரமாக துணைவேந்தரை நியமிக்க முயலும் மத்திய உயர் கல்வித்துறையின் நடவடிக்கையை தடுக்க கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் இன்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறையானது, மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிதியுதவி பெற்று நிர்வகிக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான துணைவேந்தர்கள்/இயக்குநர்கள் நியமனங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலை, மே 17 அன்று நடத்திட கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது என்ற செய்தியை அறிகிறோம். நாட்டில் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, நடைமுறையில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், இத்தகைய நியமனங்களைத் அனுமதிக்காது என்பதால் இது மிகவும் கவலையளிக்கிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சி, குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் இறுதி நாட்களில், பொதுத் தேர்தல்கள் இன்னும் 3 வாரங்களில் முடிவடையும் பின்னணியில் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் நியமனம், 2024 ஜூன் 5-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய அவசர அவசியம் ஏதும் இல்லாததால், இந்த விஷயத்தில் தாங்கள் தயவுசெய்து தலையிட்டு, மாதிரி நடத்தை விதிகள் நீக்கப்படும் வரை நேர்காணல் நடத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் கல்வித்துறைக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

x