சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்டோபர் 7-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி முடிவடைகின்றன. அதன்பின் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அந்த விடுப்பு முடிந்து அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை: இதற்கிடையே, காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று காலாண்டு விடுமுறையானது 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்டோபர் 7-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.