தார்பாயால் கட்டப்பட்ட வீட்டிற்குள் வசித்து வந்தாலும், ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் தன்னம்பிக்கை பேச்சை வெளிப்படுத்தும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய பலரது இளவயது பொருளாதார வாழ்க்கை மிகவும் கவலைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. வாழ்வில் மிகக் கடினமான பொருளாதார சூழலில் சிக்கித் தவித்து, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கே சிரமத்தை அனுபவித்த பலரும் கல்வி எனும் பேராயுதத்தால் இந்த உலகையே கட்டியாள்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெங்களூருவில் அடிப்படை வசதிகள் இல்லாத வீடு ஒன்றில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவனின் தன்னம்பிக்கை வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூருவில் சேரி பகுதியில் தார்பாயே கூரையாக இருக்கும் வீடு ஒன்றில் வசித்து வருபவர் 12 வயதான நாகராஜ். தற்போது 6ம் வகுப்பு பயின்று வரும் நாகராஜின், மிக முக்கிய பொழுதுபோக்கு புத்தகங்கள் பயில்வது. அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி ஆகியோரின் புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இரண்டாம் வகுப்பு பயிலும் போது கல்வி மட்டுமே தங்களின் இந்த பொருளாதார நிலையில் இருந்து தங்களை மீட்டெடுக்கும் என உறுதியாக நாகராஜ் நம்பியிருக்கிறார். அதை செயல்படுத்தும் வகையில் அரசுப் பள்ளியில் பயின்று வரும் நாகராஜ், தொடர்ந்து தனது வகுப்புகளில் முதலிடத்தை பிடித்து அசத்தி வந்துள்ளார்.
இது குறித்து அறிந்ததும் பிரபல யூட்யூபரான ஆஷிக் என்பவர் நாகராஜை நேரில் சந்தித்து இருக்கிறார். கூரையே இல்லாத வீட்டில் இருந்து கொண்டு வானத்தையே வளைக்க விரும்புகிற நாகராஜின் விருப்பங்கள் குறித்து அவர் அந்த வீடியோவில் கலந்துரையாடுகிறார். என்னவாக வேண்டும் என்ற கேள்வி ஆஷிக்கிடமிருந்து முழுமையாக வந்து விழுவதற்கு முன்பே, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என பதிலளிக்கிறார் நாகராஜ்.
தொடர்ந்து பேசும் அவர், ”நான் இருக்கும் வீட்டில் வசதிகள் இல்லை என்று நான் கவலைப்படவில்லை. நன்றாக பயின்றால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். அவ்வாறு நல்ல வேலைக்கு செல்லும்போது எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என உறுதியாக நம்புகிறேன். அதற்காக தொடர்ந்து நன்றாக படிக்க வேண்டும் என விரும்புகிறேன். மற்றபடி நான் எப்போதும் போல் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்கிறார்.
ஆஷிக்கின் இந்த வீடியோவை இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து இருக்கின்றனர். கல்வி என்ற தீபம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், வெற்றி எனும் பெரு நெருப்பு அவர் மனதில் கிளர்ந்தெழும் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது நாகராஜின் இந்த காணொளி.