தமிழக அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இதுவரை 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களைக் கொண்டு பேரணிகள் நடத்தப்படுகின்றன.
அது மட்டும் இலலாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு பட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதால் பெற்றோர்கள் பலரும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகின்றனர். பல ஊர்களிலும் தனியார் பள்ளிகளில் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று மாணவர்களை சேர்ப்பது போல அரசு பள்ளிகளிலும் காத்திருந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
இதனால் இதுவரை 2.80 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்தேர்வுகள் மற்றும் தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவர் சேர்க்கைப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதனால் இந்தாண்டு 5 லட்சம் பேர் வரை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தனியார் பள்ளிகளுக்கு கடும் சவாலாக மாறியிருக்கிறது.