2024-25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளின் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் புத்தகங்கள் மாற இருக்கின்றன. இதர வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி, 3 முதல் 6-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது. 2024-25ம் கல்வியாண்டுக்கான இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் வேகமாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், 2023-ம் ஆண்டு வரை என்சிஇஆர்டி-யால் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 3 - 6 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைப் பின்பற்றுமாறு பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளதாக அதன் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார். கூடுதலாக, 6-ம் வகுப்புக்கான பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் 3-ம் வகுப்புக்கான சுருக்கமான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் என்சிஇஆர்டி மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்விக்கான புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் பணியில் கவுன்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், இதர வகுப்புகளைப் பொறுத்தளவில் ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்கும் 2024-25ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டில், மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதாக 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி மீண்டும் ஆய்வு செய்தது. இதன்படி கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடப்புத்தகங்களில், முகலாய நீதிமன்றங்கள், 2002 குஜராத் கலவரம், பனிப்போர், முகலாய பேரரசர்கள் பற்றிய குறிப்புகள், அவசரநிலை மற்றும் கால அட்டவணை பற்றிய அத்தியாயங்களை கவுன்சில் அதிரடியாக நீக்கியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், வரலாற்றை அழிக்க ஆளும் பாஜக ஆட்சியில் பெரும் முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை எழுப்பினர். அந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், புதிய பாடப்புத்தகங்களும் அவற்றின் திருத்தப்பட்ட பகுதிகளும் தேர்தல் நெருக்கத்தில் கூடுதல் சர்ச்சையை உருவாக்கக்கூடும்.