உடற்கல்விக்கு ஆசிரியர்கள், பாடப் புத்தகம் இல்லை - தேர்வு மட்டும் நடத்தியதால் மாணவர்கள் குழப்பம்


கோப்புப் படம்

சிவகங்கை: உடற்கல்விக்கு ஆசிரியர்கள், பாடப் புத்தகம் இல்லாமல் தேர்வு மட்டும் நடத்தியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

தொடக்கக் கல்வித்துறையில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடம் இல்லை. ஆனால் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வாரத்துக்கு 2 பாட வேளைகள் உடற்கல்வி பாடத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. ஆனால் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. தமிழகம் முழுவதும் 7,200 உடற்கல்வி ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் பாடப் புத்தகமும் வழங்கவில்லை.

இதனால் உடற்கல்வி பாட வேளைகளில் மாணவர்கள் ஏதாவதொரு விளையாட்டை விளையாடுகின்றனர். ஆனால், அனைத்து தேர்வுகளிலும் உடற்கல்வி பாடத் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. இதையடுத்து பாடப் புத்தகமாவது வழங்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், வழக்கம்போல் இந்தாண்டும் பாடப்புத்தகம் வழங்கவில்லை. தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று உடற்கல்வித் தேர்வு நடத்தப்பட்டது. பெயரளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வால் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர்.

இது குறித்து அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்காக பாடவேளைகளையும் கொடுத்துள்ளது. ஆனால் உடற்கல்வி ஆசிரியர், பாடப் புத்தகம் இல்லை. தேர்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. பாடப் புத்தகம் வழங்கினால் கூட உடற்கல்வி தொடர்பான அடிப்படை விவரங்களை கற்பிப்போம்’ என்றனர்.

x