டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம்(எஸ்எஃப்ஐ) அறைகூவல் விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஃபரூக் ஆலம் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பிஎச்டி படித்து வருகிறார். காவேரி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவர், நேற்று இரவு சில மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஃபரூக் ஆலமை தாக்கியது ஏபிவிபி மாணவர்கள் தான் என்று இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து என்எஸ்யுஐ தனது ட்விட்டர் (X) பக்கத்தில், காவேரி விடுதியில் நடந்த பயங்கரமான சம்பவத்திற்கு விடுதியின் மூத்த வார்டன், அவரது வளர்ப்பு ஏபிவிபி குண்டர்கள் தான் காரணம். அவர்கள் தான் மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது.
ஜேஎன்யுவில் படிக்கும் மாணவர் ஃபரூக், இரண்டு மாதங்களில் தனது பிஎச்டியை முடிக்க உள்ளார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பழைய வழக்கு தொடர்பாக காவேரி விடுதியில் உள்ள அறையை காலி செய்ய ஜேஎன்யு நிர்வாகம் வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஜேஎன்யு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை எதிர்த்தும், ஏபிவிபி அமைப்புக்கு எதிராகவும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி ஜேஎன்யு வளாகத்தில் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜேஎன்யுவில் மாற்றுத்திறனாளி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.