“கல்வி வளர்ச்சிக்கு தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு...” - அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்


கோப்புப் படம்

சென்னை: கல்வி வளர்ச்சிக்கு தன்னார்வ அமைப்புகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

ரோட்டரி அமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “மாணவர்களை சமுதாயத்தில் அறம் சார்ந்த சிறந்த மனிதர்களாக உருவாக்கும் சமூக தொழிற் சாலைகளாக பள்ளிகள் திகழ்கின்றன. ஆசிரியர்களால் தான் சமூகம் மேம்படும். அவர்கள் மாணவர்களுக்கு சுய மரியாதை, சமத்துவத்தை கற்றுதர வேண்டும்.

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான செயல்பாடுகளை செய்துவருகிறோம். 22,931 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை அரசு, தனியார் பள்ளிகள் என பாகுபாடு காட்டுவதில்லை. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் தமிழக மாணவர்கள் தான். மெல்லக் கற்கும் மாணவர்கள், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த கற்பித்தலில் புதிய உத்திகள் பின்பற்றப்படுகின்றன. கலைத்திருவிழா போட்டிகளில் அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு சமுதாயம் வளர வேண்டுமானால் அது அரசால் மட்டுமே சாத்தியப்படாது. அரசுடன் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம்” இவ்வாறு அவர் கூறினார்.

x