பள்ளி விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கை தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன்ராஜ் கடந்த 2013 செப்டம்பர் 13-ம் தேதி அன்று பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். போலீஸாரின் விசாரணையில் சக மாணவர்கள் தகராறு செய்ததாலும், பள்ளியின் தாளாளர் மாணவர்கள் முன்னிலையில் மோகன்ராஜை அடித்ததால் மனமுடைந்தும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி போலீஸார், இது தற்கொலை என வழக்கை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம் பள்ளியின் தாளாளரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தாளாளர் தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம் நிர்மல் குமார், பள்ளியில் தங்கி படிக்கும் மாணவனைக் கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை, சக மாணவர்கள் பிரச்சினை செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அதைக் கண்டிக்காமல் இருந்தது தவறு.
மேலும் இந்த வழக்கை விசாரித்த போலீஸாரும் சாதாரணமாக விசாரணை செய்துள்ளனர். இந்த வழக்கை நாமக்கல் நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துள்ளதால், இதில் தாங்கள் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.