மாணவர்களின் கற்றல் திறனை அளவிட தமிழகம் முழுவதும் நவ.19-ல் நாஸ் தேர்வு


சென்னை: தமிழகத்தில் 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக நாஸ் தேர்வு நவம்பர் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு (National Achievement Survey-NAS) தேர்வானது மத்திய கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் நிலையானது கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேர்வு 3, 6, 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழகத்தில் இந்த தேர்வை நடத்தும் பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (எஸ்சிஇஆர்டி) செய்து வருகிறது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் முதுநிலை பயிற்சியாளர்கள் மற்றும் கண்காணிப் பாளர்கள் நியமிக்கப்பட்டு 2 நாள் பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தேர்வுக்கான கொள்குறி வகை வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளது. இதற்கான கள ஆய்வாளரை நியமித்து கண்காணிப்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும், மாவட்ட நீதிபதிகளை தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

x