தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு இதுவரை 1.71 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள், 8 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் மாணவர்களை சேர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக கோடை விடுமுறைக்கு முன்னரே, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்தது. அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச கல்வி, ஸ்மார்ட் கிளாஸ், ஆய்வகம், காலை, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளை விளக்கி, மாணவ, மாணவியரை சேர்ப்பதில், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்து வருகிறது. நேற்று வரை 14 நாட்களில் 1.71 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களிலும், பெரும் நகரங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது. கிராமப்புறங்களிலும் பள்ளிகளில் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
இதுவரையிலான மாணவர் சேர்க்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13,324 மாணவ, மாணவியர் இணைந்துள்ளனர். அதற்கடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,803 பேர்; சேலம் மாவட்டத்தில் 8,774 பேர் இணைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 2,003 பேர்; திருப்பூர் மாவட்டத்தில் 2,582 பேர் இணைந்துள்ளனர். மாணவர் சேர்க்கையில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் 785 பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!