கலை அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு!


ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு தேர்வு

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

இதனால் உதவி பேராசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாமக நிறுவன தலைவர் மருத்தவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

உதவி பேராசிரியர் தேர்வு

இந்த நிலையில் இது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் எனவும், அதில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உதவி பேராசிரியர் பணியிடத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

x